Wednesday, July 16, 2008

காளிகாம்பாள்



கோடி மாதம் கிடைத்தாலும் ஆடி மாதம் கிடைக்காது அம்பிகையை வழிபட என்பது ஆன்றோர் வாக்கு. தக்ஷிணாயன புண்ணிய காலத்தின் ஆரம்ப மாதமான இந்த ஆடி மாதத்தில் நம்பிக்கையோடு அம்பிகையை வழிபட வாழ்க்கை சிறக்கும் என்பது நிச்சியம்.





இன்றைய தினம் (18-07-08) ஆடி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பௌர்ணமி இணைந்து வந்துள்ளது ஆகவே அம்மன் தரிசனம் அனேக கோடி புண்ணியம். இன்று குரு பூர்ணிமா கூட 18 புராணங்களை தொகுத்து மஹா பாரதமும் எழுதிய விஷ்ணு ரூப வியாச பகவானை வழிபடும் நாள், தத்தம் குருக்களிடம் ஆசி பெரும் நாள். இந்நன்னாளில் அம்பிகை சென்னயில் காளிகாம்பாளாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம்.
*****
கமடேஸ்வர நாயகி அன்னை காளிகாம்பாள்

காளிகாம்பாள் மூலவர்



கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை குடி கொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹா கவி பாரதியாரும் வழிபட்ட தலம், விஸ்வ கர்மாவிற்கு தனி சன்னதி உள்ள தலம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் கொண்ட தலம் தான் சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோவில். கமடேஸ்வரி, கோட்டையம்மன், சென்னியம்மன், நெய்தல் நில காமாட்சி என்றும் ஆயிரம் திருநாமம் அம்பாளுக்கு இத்தலத்தில். மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் முதலிய புராணங்களில் இத் திருக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. வாருங்கள் இத்திருகோவிலின் பெருமைகளை பார்ப்போம்.





அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் கரந்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தியானவள் நாம் உய்யக் கொள்ளும் வேடங்கள் அநேகம் அவற்றுள் ஒன்றுதான் காளி. துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்க அம்மை கொள்ளும் கோலமே காளி ரூபம். காலம் என்பதன் தெய்வீக ரூபமே காளி. இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!. கோரமும் இறைவன் செயலே என்பதை எடுத்துக் காட்டவே, சௌந்தர்யமான அன்னை சக்தி, குரூரமான காளி உருவம் கொள்கிறாள். அழிவு இல்லாமல் ஆக்கம் ஏது? இரவை அழித்து பகலையும் பகலை அழித்து இரவையும் உண்டு பண்ணுபவள் அன்னையே.



காளிகாம்பாள் உற்சவர்



தர்மமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரிலே தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாக்ஷ’யாய், தீயவர்களை அழிக்கும் காளிகாம்பாளாய், உலகையாளும் தேவியாய், தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் கமடேஸ்வரி அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள் அந்த பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி.





மிகவும் புராதனமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள். தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷ’யாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்க்குத்தான் நடைபெறுகின்றது.



ஸ்ரீ காளிகாம்பாள் திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடல்
கலைமக்ளே திருமக்ளே மலைமகளே
காலை கதிரொளியே!
குலக்கொழுந்தே கொற்றவையே காளிஎனும்
கலைக்கடலே கருணை ஈவாய்
சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும்
சேர்ந்தன போல் சிவமும் தாயும்
அறந்தழைக்க நேர் பாதி கலந்த கோல
அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு.


இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்து‘ரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று. "ஸமாசர ரமாவாணி ஸவ்ய தக்ஷ'ண சேவிதா" என்ற லலிதா சகஸ்ரநாம நாமாவின் படி ஸ்ரீ மஹா லக்ஷ்மியும், ஸ்ரீ மஹா சரஸ்வதியும் தன் இரு கண்களாய் அமையப் பெற்ற காளிகாம்பாள் இவளாவதால் செல்வமும் கல்வியும் குவிந்துள்ள நகரமாய் சென்னை விளங்குகின்றது.

தெற்கு இராஜ்ஜயங்களை தன்வயப்படுத்தி திக்விஜயம் செய்த மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி 1667ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து அன்னையை வழிபட்ட செய்தியை வரலாற்று ஏடுகளில் நாம் காணலாம். பிராட்வேயில் சுதேச மித்திரனில் பணி செய்து கொண்டிருந்த போது மஹாகவி பாரதியார்
யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் - நின்றன்
செயல்களின்றி இல்லை
போதும் இந்த மாந்தர் வாழும்
பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதி சக்தி தாயே - என் மீது
அருள் புரிந்து காப்பாய்



என்று அன்னையின் மேல் பாடல்கள் புனைந்துள்ளார். பாரதியார் பாடிய காளி பாடல்கள் அனைத்தும் அன்னையைப் பற்றியதே. சிவபெருமானின் அம்சமாக காலடியில் தோன்றி நமது சனாதன தர்மமான இந்து மதத்திற்க்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் இவ்வாலயத்திற்கு எழுந்தருளி அன்னையை வழிபட்டு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கின்றார் இந்த சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளும் இத்திருகோவிலில் சுதை சிற்பங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.


அன்னையின் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, கோஷ்டத்தில் வித்யேஷ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷ‘யணி, மற்றும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அம்மனுக்கு வலப்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கமடேஸ்வரர் சன்னதி. ஐயனின் கோஷ்டத்திலும் சிறிதாக துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, ஆலமர் கடவுள் மற்றும் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் உள்ளேயே கிழக்கு நோக்கி அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது. சிவசக்தித்தலமான இத்தலத்தில் எம்பெருமான் கமடேஸ்வரராகவும், அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.. எனவே இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சி, அருணை ஆகிய இரு தலங்களையும் வழிபட்ட பலன் உண்டு.மேலும் கோவிலின் உள்ளேயே குரு சனனதியும், பள்ளியறையும் உள்ளன.


நெரிசல் மிகுந்த பாரி முனைப் பகுதி என்பதால் ஒரே ஒரு பிரகாரம். பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய சித்தி புத்தி வினாயகர் சன்னதி. சுப்பிரமணியர் வட கதிர் காம முருகராகவும், அகோர வீர பத்திரர், மஹா காளி, வேத மாதா காயத்ரி, துர்கா, விஸ்வ கர்மாஆகியே'ருக்கு தனித்தனி சந்நிதிகள், வீரபத்திரர் சன்னதியின் விமானத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய ஆணவம் நீங்கிய தட்சன் வீர பத்திரரை வணங்கும் சுதை சிற்பம் அற்புதமாக உள்ளது. வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் செப்புத் திருமேனி, எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வெளி பிரகாத்தில் வட கிழக்கு முலையில் ஆடல் வல்லான் சன்னிதி பிரம்மோற்சவ காலங்களில் அம்மனின் அலங்கார மண்டபமாகவும் விளங்குகின்றது. பரிவார தேவதை கடல் கண்ணி, கடல் தீர்த்தம் எனவே அன்னை நெய்தல் நில காமாட்சி என்றும் அழைக்கப்படுகின்றாள் , தல விருட்சம் மா மரம்.




ஸ்ரீசகர நாயகிக்கு கிண்ணித் தேர்




வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது. வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் இரவு வெண்கல கிண்ணிகளால் நிறைந்த இத்திருத் தேரிலே மின் விளக்கு ஒளியில் பவனி வருகின்றாள் அன்னை. நடராஜருடன் இத்தலத்திலே எலும்பும் தோலுமாய் , மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.




பிரம்மோற்சவத்தின் போது அம்மனின் எழிற்கோலம்



உற்சவ மூர்த்திகள் இருவர் பெரிய நாயகி மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் தோழியராக நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் . சிறிய நாயகி பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில், அருட்காட்சி தருகின்றாள். அகோர வீரபதித்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 6 மாதம் பௌர்ணமியண்று வழிபட்டால் இஷ்ட சித்தியாகும். விராட புருஷன் விஸ்வ கர்மாவுக்கு தனி சன்னதி உள்ளது. அவரை
ஓம் சத்யோஜாத முகாய பிரம்மதேவனே நம:
ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:
ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:
ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:
ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம:
ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:
என்று அகில ஜகத்திற்கும் குருவாகவே விஸ்வ கர்மா பெருமக்கள் வணங்குகின்றனர்.







நாளெல்லாம் திருனாளே நமை காக்க வருவாளே என்றபடி திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாதான். சித்திரையிலே குங்கும லட்ச்சார்சனை. சித்ரா பௌர்ணமியன்று திரு விளக்கு வழிபாடு. வைகாசியிலே வைகாசி விசாகத்தை ஒட்டி 10 நாள் பிரம்மோற்சவம். முதல் நாள் வினாயகர் உற்சவம், துவஜாரோகணம், தினமும் காலையிலும் மாலையிலும் திரு வீதி உலா, காலை 3வது நாள் பூத வாகனம், 7ம் நாள் பூத்தேர் மிகவும் விசேஷம். மாலையிலே 2ம் நாள் காமதேனு வாகனம், 4ம் நாள் ரிஷப வாகனம், 5ம் நாள் சிம்ம வாகனம், 6ம் நாள் தும்பிக்கையும், காதும் ஆடும் யானை வாகனம், 9 நாள் கிண்ணித்தேர் என்று சர்வ அலங்காரத்துடன் அருட்காட்சி தந்து மாட வீதிகளில் உலா வருகின்றாள் அன்னை. ஆனியிலே வசந்த விழா. அன்னைக்கு உகந்த ஆடி பெருவிழா 10 ஞாயிற்றுக் கிழமைகள், வெள்ளிக்கிழமையிலே ஊஞ்சல் உற்சவம். ஆவணியிலே வினாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் கொலுவிருக்கும் அன்னை விஜய தசமியன்று வீதி உலா வருகின்றாள். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி விழா. கார்த்திகை சோம வாரம் மற்றும் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் 10 நாட்களும் மாணிக்கவாசகர் உலா பத்தாம் நாள் காலையில் நடராஜர் சிவகாமசுந்தரி அபிஷேகம் மற்றும் தீபாரதனை பின் புறப்பாடு, கோவிலுக்கு திரும்பி வரும் போது அம்மை முதலில் உள்ளே வந்து பின் கதவை சாத்துகின்றனர் பின் திருஊடல் உற்சவம், அம்மை சமாதானம் ஆன பின் சபைக்கு எழுந்தருளுகின்றார் எம்பெருமான் . மாலையிலே காளிகாம்பாள் திருவீதி உலா. தை மாதம் பொங்கல், பூச்சொரிதல், மூன்றாம் வெள்ளி பட்டாபிஷேகம், 4வது வெள்ளி 108 திருவிளக்கு வழிபாடு, வெள்ளி ஊஞ்சல். தைப்பூசத்தன்று தெப்பம் கச்சாலீஸ்வரர் கோவிலில். மாசி மகத்தில் கடலாடல் மற்றும் சிவராத்திரி. பங்குனியில் வசந்த நவராத்திரி. அம்மை உலா வர நு‘தன வெள்ளி ரதம் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அம்மனுக்கு இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித்தேர் என்று மூன்று தேர்கள.




பிரம்மோற்சவத்தின் போது 7ம் நாள் பூத்தேர் கமடேஸ்வரிக்கு

அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும், பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர் அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி . தாங்களும் எல்லா நலமும் வளமும் பெற சென்னையில் குடி கொண்டிருக்கும் காளிகாம்பாளை வந்து தரிசனம் செய்து தான் பாருங்களேன் கேட்ட வரம் தருவாள் கோட்டையம்மன்.
* * * * * * *

Sunday, June 22, 2008

நாட்டுக்கல் பாளையம் அங்காள பரமேஸ்வரி

இரண்டாவது பதிவு எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரியின் சரிதம்.


முன்னைப் பழம் பொருளுக்கும் முன்னைப் பழம் பொருளும், பின்னை புதுமைக்கும் பேற்றும் அப்பெற்றியனான, ஆதியும் அந்தமும் இல்லாத சிவப்பரம் பொருளுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் மிகவும் முக்கியமானது "மஹா சிவராத்திரி விரதம்" ஆகும். மாசி மாதம் வரும் கிருக்ஷ்ண பக்ஷ சதுர்த்தியன்று மஹா சிவராத்திரி நமது பாரத தேசமெங்கும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. நதிகளிலே எவ்வாறு பாகீரதியும், மரங்களிலே கற்பக தருவும், பசுக்களிலே காமதேனுவும், யாணைகளிலே ஐராவதமும், கடல்களிலே பாற்கடலும், பர்வதங்களிலே கைலாயமும் சிறந்ததோ அது போல விரதங்களிலே சிறந்தது மஹா சிவராத்திரி விரதம்.

இந்த இரவின் சிறப்புக்கள் தான் எத்தனை எத்தனை. எம்பெருமானின் அடியையும் முடியையும் காண மாலும் அயனும் தேடிச் சென்ற போது அனலுருவாய் சோதிப் பேரொழிப்பிழம்பாய், லிங்கோத்பவராய் தோன்றிய இராத்திரி மஹா சிவராத்திரி. இதையே ஸ்கந்த புராணத்தில்
அரியும் யரணும் முன் தேடும் அவ்வனற்கிரி அலை
கிரி எனும்படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த
இரவதே சிவராத்திரி ஆயினது இறைவர்

பரவி உய்ந்தனர் அன்னதோர் வைகலிற் பலரும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரளய காலத்தின் முடிவில் சகல உயிர்களும் சிவபெருமானிடம் ஒடுங்க, அம்மை கருணையினால் உயிர்களுக்கு இரங்கி தவம் இருந்த இராத்திரியே சிவராத்திரி. அம்மை விளையாட்டாக சூரிய சந்திரர்களான ஐயனின் இரு கண்களை பொத்த உலகம் முழுவதும் இருண்டது, அறம் வழுவின, அதற்கான பரிகாரமாக, ஆகமவிதிப்படி அம்மை சிவ பூஜை செய்த நான்கு யாமமே சிவராத்திரி. தேவி தவமிருந்து இடப்பாகம் பெற்ற நாள், அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள், கண்ணப்பர் கண்ணை அப்பி முக்தி பெற்ற நாள், பாகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகிற்கு கொண்டு வந்த நாள் இந்நாளே என்று இந்நாளின் சிறப்புக்காக பல்வேறு ஐதீகங்கள் உள்ளன.

இறைவன் மாதொரு பாகனல்லவா எனவே அவருக்குரிய சிவராத்திரி அம்மைக்கும் உரியதன்றோ? ஆம் உரியது. ஆங்காரம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது சிரத்தை ஐயன் கொய்த போது அந்த பிரம்ம கபாலம் ஐயனின் கைகளில் ஒட்டிக் கொண்டு அவர் பிக்ஷாடணராக அலைந்தார். கணவன் நிலை கண்டு மனம் நொந்த அம்மை அந்த பிரம்ம கபாலத்தை தன் கையில் வாங்கி பித்தாகி அலைந்த ரூபமே அங்காள பரமேஸ்வரி ரூபம். இவ்வாறு அலைந்த அம்மை பின் இதே மஹா சிவராத்திரி நன்னாளில் பின் மயானத்தில் அண்ணன் மஹா விஷ்ணுவின் யோசனைப்படி சோறு இறைத்து பிரம்ம கபாலம் நீங்கப் பெற்று மேல் மலையனூரில் நாம் உய்ய கோவில் கொண்டதால்,அங்காள பரமேஸ்வரிக்கும் உரிய நாள் மஹா சிவராத்திரியாகும். எனவே தான் மஹா சிவராத்திரியன்று எல்லா அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடை பெறுகின்றது.

எனவே அந்த அம்மைக்குரிய அந்த சிவராத்திரியின் போது மேல் மலையனூரிலிருந்து குடகனாற்றிலே குறத்தி மீனாக குடத்திலே வந்து நாட்டுக்கல் பாளையம் என்ற ஊரிலே கோவில் கொண்ட , தானே வந்தெம்மை ஆட்கொண்ட அற்புத வரலாற்றைக் காண தங்களை இரு கரம் கூப்பி அழைக்கின்றேன் என்னுடன்.

ஒரு சமயம் வணிக மக்கள் சிலர் சதங்கைகள் பூட்டிய மாடுகள் பூட்டிய வண்டிகளிலே மஞ்சள், மிளகு, மற்றும் மயில் தோகை முதலியவற்றை ஏற்றிக் கொண்டு சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சோதித்து அருள கருணைக் கடலாம் அந்த அகிலாண்ட நாயகி , உலக மாதவாய் ஏக நாயகியாய் உக்ர ரூபிணியாய் திருமேனி கொண்டு பக்தர்களுக்கு உண்டாகும் பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம் கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும் "ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி" சுருக்கம் விழுந்த தோலுடன் தலை நரைத்த கிழவியாய் கையில் கோலூன்றி அவர்களிடம் வந்து,
"மக்களே வண்டியிலே என்ன கொண்டு செல்கிறீர்கள்?"
என வினவ அவர்களும் உண்மையைக் கூறாமல்
"நாங்கள் தவிடும், புண்ணாக்கும் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம் தாயே"
என்றனர். அனைத்தையும் அறிந்த அன்னை சிரித்து
"அப்படியே ஆகட்டும்"
என்று சென்று விட்டாள். வணிகர்கள் சந்தை சென்று வண்டிகளை பிரித்துப் பார்த்த போது பொருடகள் அனைத்தும் தவிடும் புண்ணாக்குமாக இருக்கக் கண்டு மன்னிப்புக் கேட்க அம்மையும் தான் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி என்றும் தன்னை குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வரவும் நான் உங்கள் குடி உயர செய்வேன் என்று கூறினாள் அது முதல் அவர்களும் அங்காள பரமேஸ்வரியை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வந்தனர்.

அவ்வாறு இருந்து வரும் நாளில் ஒரு சமயம் அவர்கள் குடும்பத்தின் பெண்கள் நீர் கொண்டுவர குடகனாற்றுக்கு சென்ற போது குறத்தி மீனின் வடிவிலே அவர்கள் குடத்திலே குபு குபு என்று வந்து புகுந்து கொண்டாள் அந்த அங்காளியானவள். அந்தக் கன்னிப் பெண்களும் அந்த குடத்தை சுமக்க முடியாமல் சுமந்து வந்த வீடு சேர்ந்த பிறகு அம்மை மீன் வடிவத்தில் அவர்களுக்கு தெய்வமாய் தானே வந்திருப்பதாக கூறினாள். அவர்கள் பாலும் தேனும் பகிர்ந்தளிக்க அந்த ரூபத்திலேயே குடத்தோடு வந்த தாய் குலத்தோடு தங்கி விட்டாள்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் அவர்கள் ஒரு வெள்ளிப் பேழையிலே அம்மையை எழப் பண்ணி தங்களுடன் தாங்கள் செல்லும் இடமெல்லாம் தாயையும் கொண்டு சென்று வெள்ளிக் கிழமைகளில் அத்தாய்க்கு பூஜை செய்து வரும் வேளை, ஒரு சமயம் அவர்கள் புளியம்பட்டியில் ஒரு ஒலைக் குடிசையில் அம்மையை வைத்து வணங்கி வரும் போது அம்மன் தான் நிலையாக குடிகொள்ள வேஎண்டி ஒரு நாடகம் ஆடினாள். அந்த ஓலைக் குடிசையில் பற்றியது அக்னி. "ஆனால் அக்னி ஜூவாலையையே மகுடமாக அணிந்த அந்த மகேஸ்வரியை அந்த அக்னிதான் என்ன முடியும்?". எரிந்தது ஓலைக் குடிசை மட்டுமே ஆனால் அம்மை இருந்த பேழை மட்டுமே அப்படியே இருந்தது.

எனவே அவர்கள் அம்மனிடம்
"தாயே எங்களுடன் நீயும் ஏன் அலைய வேண்டும்?
" உனக்கு நிலையான ஒரு கோவில் கட்ட ஒரு இடத்தை கூறு ?"
என்று மனமுருகி வேண்டி நிற்க, அந்த தாயும் கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சிக்கு அருகில் நாட்டுக்கல்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள ஜமீன்தாரின் வளர்ப்பு பிள்ளைக்கு தங்கள் பெண் ஒருத்தியை மணம் செய்து கொடுங்கள், பேழையுடன் என்னையும் சீதனமாக கொடுங்கள் நான் அங்கே கோவில் கொள்கிறேன் என்றாள். அவ்ர்களும் அவ்வாறே அந்த ஜகன் மாதாவுக்கு கோவில் கட்டி சிறப்பாக இன்றும் வழிபட்டு வருகின்றனர்.


ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மையை பேழையிலிருந்து எடுத்து பொன்னு‘ஞ்சல் ஆட்டுகின்றனர். அம்மைக்கு உகந்த மஹா சிவராத்திரியன்று அம்மை ஆற்றுக்கு எழுந்தருளி அருள் முகத்துடன் கோவிலுக்கு எழுந்தருளி மேல் மலையனு‘ர், குடகனாறு தீர்த்தவாரி கண்டருளி பின் இரவில் பள்ளய பூஜை கண்டருளுகிறாள். மறுநாள் மாலையில் வெள்ளி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வந்தருளி உஞ்சல் உற்சவம் கண்டருளுகிறாள். தானே வந்து ஆட்கொண்ட அம்மையைக் காண இப்போதே கிளம்பி விட்டீர்களா நாட்டுக்கல் பாளையத்திற்கு?

Tuesday, April 29, 2008

ஈச்சனாரி வினாயகர்

>
முதல் பதிவு முழுமுதல் கடவுள் விநாயகரின் ஆலயம்.


பிடியதனுரு உமை கொள மிகு கரியது

வடி கொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலமுறை யிறையே.
- திருஞானசம்பந்தர்



இந்து மதத்தின், அறு சமயங்களுள், முழு முதற் கடவுளாகிய கணபதியை வழிபடுவது காணபத்யம் என்று வழங்கப்படுகின்றது. எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னர் கணபதியை வணங்கிவிட்டு தொடங்கினால் அந்த காரியம் தடங்கலின்றி முடியும் என்பது நம்பிக்கை, ஏனென்றால் கணபதி விக்னங்களை எல்லாம் தீர்த்து அருளுபவர். பிள்ளையார் என்றும் அழைக்கப்படும் இவர் மிகவும் எளிமையானவர். பிடித்து வைத்த மஞ்சள் அல்லது மண்ணே பிள்ளையாராகின்றார். சாதாரணமாக அரச மரத்தடியிலும், குளத்தங்கரையிலும் குடி கொண்டிருப்பவர் இவர். இந்த வினாயகர் பல் வேறு ரூபங்களில் பல ஊர்களில் எழுந்தருளி அருள் புரிகிறார். அப்படியொரு தலம் தான் கோவையை அடுத்துள்ள ஈச்சனாரி அத்தலத்தின் சிறப்புகளைப் பற்றிப் பார்ப்போமா?



பாலக்காட்டு கணவாயின் பயனால் மலையாள மாருதம் கொஞ்சி தவழ்ந்து விளையாடும் நகரம் தான் கோவை. தென்னாட்டு மான்செஸ்டர் என்று புகழ் பெற்ற இந்நகரில் அனேக திருக்கோவில்கள் உள்ளன. அவற்றுள் சில தண்டு மாரியம்மன் கோவில், மற்றும் கோணியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரம் முதலியன. ஆயினும் கோவை என்றவுடன் நினிவுக்கு வரும் வினாயகரின் கோவில் ஈச்சனாரி ஆகும். இத்திருக்கோவிலின் சிறப்புகளாஇப் பற்றி இக்கட்டுரையில் காண தங்களை இரு கரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள் கோவை செல்வோம். கோவை மாநகரிலிருந்து உடுமலை செல்லும் வழியில் 10 கி.மீ தூரத்தில் ஈச்சனாரி கிராமத்தில் அமையப்பெற்றது இத்திருத்தலம்.



இங்கு விநாயகப்பெருமான் எழுந்தருளிய வரலாறு மிகவும் வேடிக்கையானது. கொங்கு மண்டலத்தின் தொன்மை வாய்ந்த கோயில்களில் ஒன்றானதும், முக்தித் தலமானதும் ஆடல்வல்லானின் அற்புதமான சிற்பங்கள் நிறைந்த ஆதி அம்பலத்தை உடையதும் ஆன பேரூர் பட்டீஸ்வரப்பெருமான் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட இந்த விநாயகர் விக்கிரகம், மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் கொண்டு வரப் பட்ட போது , வினாயகப் பெருமானின் திருவிளையாடலால் வண்டியின் அச்சு முறிந்து வினாயகர் விக்ரகம் கீழே சாய்ந்தது.



கீழே சாய்ந்த வினாயகரை மீண்டும் வண்டியில் ஏற்ற எவ்வளவோ முயன்றும் அது முடியவில்லை. அவரே அங்கேயே கோவில் கொள்ள நினைத்தபின் மானிடர்களால் என்ன செய்ய முடியும். பின்னர் அவரே தானே வந்து நமக்கெல்லாம் அருள் பாலிக்க தேர்ந்தெடுத்த அதே இடத்தில் திருக்கோவில் உருவானது. அன்று முதல் இன்று வரை அவ்வழி செல்லும் அனைவருக்கும் அருட்காட்சி அளித்து நன்மை பல புரிந்து வருகின்றார் ஈச்சனாரி வினாயகர். இவ்வழியில் செல்லும் எல்லா வாகனங்களும் இவர் திருக்கோவிலில் நின்று இவர் அருளைப் பெற்ற பின்னரே செல்கின்றன

இவ்வாறு தானே வந்து இங்கு கோவில் கொண்ட மூலவர் 5 அடி உயரமும், 3 அடி பருமனும் உடையவர். பாதையில் இருந்து பார்த்தால் அமர்ந்த கோலத்தில் அங்குச பாசம் ஏந்தி துதிக்கை இடது புறம் வளைந்திருக்க உயரத்தில் சன்னதி அமைக்கப்பட்டிருப்பதால் கம்பீரமாகவும் எழிலாகவும் அருட்காட்சி தருகின்றார் விக்னராஜா.இக்கோவிலில் செய்யப்படும் , 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர்விதமான அலங்காரம் செய்யும் " நட்சத்திர அலங்கார பூஜை" மிகவும் விஷேஷமானது ஆகும். தமிழ் வருடப்பிறப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தியன்று இக்கோவிலில் லட்ச்சகணக்கான மக்கள் கூடுகின்றனர்.



இக்கோவில் நவீன கட்டிட அமைப்புடுடன், மகா மண்டபம், அதனை சுற்றிலும் ஜன்னல் அமைப்பு, ஆலயத்தை சுற்றிலும் பசும் புல் தரை அமைப்பு, பூந்தோட்டத்துடன், எழிலுற விளங்குகின்றது. கோவிலின் உட்புறம் வினாயகப் பெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை விளக்கும் ஓவியங்கள் அழகாக கண்ணாடி சட்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.
கோவில் தினப்படிக்கு வேண்டிய பால்,தயிர்,பன்னீர்,விபூதி,குங்குமம்,சந்தனம், புஷ்பங்களுக்கு ஆகின்ற செலவு அனைத்தும் பக்தர்களின் கட்டளையின் உதவியாலேயே நடைபெறுகிறது.



இவ்வாலயம் கிழக்குப் பார்த்த கோபுரம் உடையது. மூன்று நிலைகளை கொண்டது. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் இரு யானை உருவங்கள் கலசங்களை தாங்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தினுள் நீண்ட சதுர வடிவில் உள்ள மண்டபம், நான்கு தூண்களை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் ராசி சக்கரம் உள்ளது.



வினாயகப் பெருமானை தரிசிக்க சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகின்றது. சங்கடஹர சதுர்த்தியன்று வினாயகப்பெருமானை தரிசித்தால், சங்கடங்கள் தீரும் என்பதி ஐதீகம். எனவே இந்நாளன்று பக்த பெருமக்கள் பெருந்திரளாக வந்து வினாயகப் பெருமானின் அருளைப் பெருகின்றனர்.



அருள்மிகு வினயகப் பெருமான் திருவீதி உலா வர ரூ. 36 லட்சம் செலவில் தங்கத்தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே வினாயகப் பெருமான் திருவீதி உலா வர தங்கத்தேர் திருப்பணி செய்து அளித்து இருப்பது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நாமும் ஒரு தடவை கோவை சென்று ஈச்சனாரி விநாயகரை வழிபட்டு நன்மை அடைவோமாக.

* * * * * * *