Tuesday, April 29, 2008

ஈச்சனாரி வினாயகர்

>
முதல் பதிவு முழுமுதல் கடவுள் விநாயகரின் ஆலயம்.


பிடியதனுரு உமை கொள மிகு கரியது

வடி கொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலமுறை யிறையே.
- திருஞானசம்பந்தர்



இந்து மதத்தின், அறு சமயங்களுள், முழு முதற் கடவுளாகிய கணபதியை வழிபடுவது காணபத்யம் என்று வழங்கப்படுகின்றது. எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னர் கணபதியை வணங்கிவிட்டு தொடங்கினால் அந்த காரியம் தடங்கலின்றி முடியும் என்பது நம்பிக்கை, ஏனென்றால் கணபதி விக்னங்களை எல்லாம் தீர்த்து அருளுபவர். பிள்ளையார் என்றும் அழைக்கப்படும் இவர் மிகவும் எளிமையானவர். பிடித்து வைத்த மஞ்சள் அல்லது மண்ணே பிள்ளையாராகின்றார். சாதாரணமாக அரச மரத்தடியிலும், குளத்தங்கரையிலும் குடி கொண்டிருப்பவர் இவர். இந்த வினாயகர் பல் வேறு ரூபங்களில் பல ஊர்களில் எழுந்தருளி அருள் புரிகிறார். அப்படியொரு தலம் தான் கோவையை அடுத்துள்ள ஈச்சனாரி அத்தலத்தின் சிறப்புகளைப் பற்றிப் பார்ப்போமா?



பாலக்காட்டு கணவாயின் பயனால் மலையாள மாருதம் கொஞ்சி தவழ்ந்து விளையாடும் நகரம் தான் கோவை. தென்னாட்டு மான்செஸ்டர் என்று புகழ் பெற்ற இந்நகரில் அனேக திருக்கோவில்கள் உள்ளன. அவற்றுள் சில தண்டு மாரியம்மன் கோவில், மற்றும் கோணியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரம் முதலியன. ஆயினும் கோவை என்றவுடன் நினிவுக்கு வரும் வினாயகரின் கோவில் ஈச்சனாரி ஆகும். இத்திருக்கோவிலின் சிறப்புகளாஇப் பற்றி இக்கட்டுரையில் காண தங்களை இரு கரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள் கோவை செல்வோம். கோவை மாநகரிலிருந்து உடுமலை செல்லும் வழியில் 10 கி.மீ தூரத்தில் ஈச்சனாரி கிராமத்தில் அமையப்பெற்றது இத்திருத்தலம்.



இங்கு விநாயகப்பெருமான் எழுந்தருளிய வரலாறு மிகவும் வேடிக்கையானது. கொங்கு மண்டலத்தின் தொன்மை வாய்ந்த கோயில்களில் ஒன்றானதும், முக்தித் தலமானதும் ஆடல்வல்லானின் அற்புதமான சிற்பங்கள் நிறைந்த ஆதி அம்பலத்தை உடையதும் ஆன பேரூர் பட்டீஸ்வரப்பெருமான் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட இந்த விநாயகர் விக்கிரகம், மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் கொண்டு வரப் பட்ட போது , வினாயகப் பெருமானின் திருவிளையாடலால் வண்டியின் அச்சு முறிந்து வினாயகர் விக்ரகம் கீழே சாய்ந்தது.



கீழே சாய்ந்த வினாயகரை மீண்டும் வண்டியில் ஏற்ற எவ்வளவோ முயன்றும் அது முடியவில்லை. அவரே அங்கேயே கோவில் கொள்ள நினைத்தபின் மானிடர்களால் என்ன செய்ய முடியும். பின்னர் அவரே தானே வந்து நமக்கெல்லாம் அருள் பாலிக்க தேர்ந்தெடுத்த அதே இடத்தில் திருக்கோவில் உருவானது. அன்று முதல் இன்று வரை அவ்வழி செல்லும் அனைவருக்கும் அருட்காட்சி அளித்து நன்மை பல புரிந்து வருகின்றார் ஈச்சனாரி வினாயகர். இவ்வழியில் செல்லும் எல்லா வாகனங்களும் இவர் திருக்கோவிலில் நின்று இவர் அருளைப் பெற்ற பின்னரே செல்கின்றன

இவ்வாறு தானே வந்து இங்கு கோவில் கொண்ட மூலவர் 5 அடி உயரமும், 3 அடி பருமனும் உடையவர். பாதையில் இருந்து பார்த்தால் அமர்ந்த கோலத்தில் அங்குச பாசம் ஏந்தி துதிக்கை இடது புறம் வளைந்திருக்க உயரத்தில் சன்னதி அமைக்கப்பட்டிருப்பதால் கம்பீரமாகவும் எழிலாகவும் அருட்காட்சி தருகின்றார் விக்னராஜா.இக்கோவிலில் செய்யப்படும் , 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர்விதமான அலங்காரம் செய்யும் " நட்சத்திர அலங்கார பூஜை" மிகவும் விஷேஷமானது ஆகும். தமிழ் வருடப்பிறப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தியன்று இக்கோவிலில் லட்ச்சகணக்கான மக்கள் கூடுகின்றனர்.



இக்கோவில் நவீன கட்டிட அமைப்புடுடன், மகா மண்டபம், அதனை சுற்றிலும் ஜன்னல் அமைப்பு, ஆலயத்தை சுற்றிலும் பசும் புல் தரை அமைப்பு, பூந்தோட்டத்துடன், எழிலுற விளங்குகின்றது. கோவிலின் உட்புறம் வினாயகப் பெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை விளக்கும் ஓவியங்கள் அழகாக கண்ணாடி சட்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.
கோவில் தினப்படிக்கு வேண்டிய பால்,தயிர்,பன்னீர்,விபூதி,குங்குமம்,சந்தனம், புஷ்பங்களுக்கு ஆகின்ற செலவு அனைத்தும் பக்தர்களின் கட்டளையின் உதவியாலேயே நடைபெறுகிறது.



இவ்வாலயம் கிழக்குப் பார்த்த கோபுரம் உடையது. மூன்று நிலைகளை கொண்டது. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் இரு யானை உருவங்கள் கலசங்களை தாங்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தினுள் நீண்ட சதுர வடிவில் உள்ள மண்டபம், நான்கு தூண்களை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் ராசி சக்கரம் உள்ளது.



வினாயகப் பெருமானை தரிசிக்க சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகின்றது. சங்கடஹர சதுர்த்தியன்று வினாயகப்பெருமானை தரிசித்தால், சங்கடங்கள் தீரும் என்பதி ஐதீகம். எனவே இந்நாளன்று பக்த பெருமக்கள் பெருந்திரளாக வந்து வினாயகப் பெருமானின் அருளைப் பெருகின்றனர்.



அருள்மிகு வினயகப் பெருமான் திருவீதி உலா வர ரூ. 36 லட்சம் செலவில் தங்கத்தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே வினாயகப் பெருமான் திருவீதி உலா வர தங்கத்தேர் திருப்பணி செய்து அளித்து இருப்பது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நாமும் ஒரு தடவை கோவை சென்று ஈச்சனாரி விநாயகரை வழிபட்டு நன்மை அடைவோமாக.

* * * * * * *

2 Comments:

At June 22, 2008 at 7:05 AM , Blogger jeevagv said...

படிக்கும்போதே, பார்க்கவேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!

 
At June 22, 2008 at 7:24 AM , Blogger Muruganarul said...

முதல் முயற்சியே முத்தானது என்று சொல்லி வாழ்த்திய ஜீவா வெங்கட்ராமன் அவ்ர்களே வாருங்கள், ஆயிரம் நன்றிகள்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home